உட்கார்ந்திருந்த பெண்மணி நிறுத்தத்தில் இறங்கி நான் அவள் இருக்கையில் உட்கார்ந்தபோது பேருந்தில் கூட்டம் இருந்தாலும் அவ்வளவு நெரிசல் இல்லை. அருகில் நின்ற பெண் பையை தரும்போது அவள் பார்த்த பார்வையில் ஒரு துவேஷம் இருந்தது. ஏனோ நிற்கின்றவர்களுக்கு உட்கார்ந்திருப்பவர்களுடனும், உட்கார்ந்திருப்பவர்களுக்கு ஜன்னல் இருக்கையில் இருப்பவர்களுடனும்
ஒரே நொடியில் ஜென்மபகை முளைத்துவிடுகிறது. நொடியில் அந்த குற்ற உணர்ச்சி மறந்து நானும் வசதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்க துவங்கினேன். இன்றுதான் சம்பள நாள். பெரியாரில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அப்படியே பிரியாவுடன் போத்தீஸ் சென்று வந்ததில் இன்று கொஞ்சம் நேரமாகிவிட்டதுதான். ரகங்கள் அவ்வளவாக பிடிக்கவில்லையென்று நாளை ஏ.கே.அஹமத் செல்லலாம் என வந்துவிட்டோம், என்ன இருந்தாலும் நடுத்தர வர்க்க மதுரைவாசிகளுக்கு ஏ.கே.அஹமதுதான்.
பேருந்து வேறு மெதுவாக சென்று கொண்டிருந்தது. நிறுத்தங்கள் செல்ல செல்ல கூட்டம் குறைந்தபோது தீக்கதிர் நிறுத்தத்தில் அவள் ஏறினாள் கையில் குழந்தையுடன். வேண்டாமென நினைத்தபோதும் நான் எண்ணியவாரே அவள் ஒருகணம் தயங்கிவிட்டு என்னருகில்தான் அமர்ந்தாள். என்னதான் முற்போக்காக சிந்திப்பதாக நினைத்தாலும் சில அதிகார சுகங்களுக்கு பழகிப்போன மனம் அதிலிருந்து விடுபட மறுத்தது. தயக்கம், அவள் அழுக்கு சேலையும் துர்வாடையுமே தவிர வறுமை இல்லை என முட்டு கொடுத்தது. ஆனால் அவளோ அந்த ஸ்மரணை ஏதுமின்றி என்னருகில் தள்ளி அமர்ந்தாள்.
அப்போது தான் அவளை நன்றாக பார்த்தேன். சருகாகிபோன ஒரு ரேஷன் புடவையும், ஒரு பிளாஸ்டிக் தோடும், எப்போதோ வாங்கி இப்போது கறுத்துப்போன ஒரு கவரிங் செயினும், அவளின் ஒட்டிய கழுத்தெலும்பும், வயதிற்கு மீறி அவள் மூக்கருகில் தெரிந்த சுருக்கங்களும் என்னையறியாமல் அல்லது அறிந்து தள்ளி உட்காரவைத்தது.
மேலும் அவள் என்னை பார்த்து சிரித்தபோது சுத்தமாக வெலவெலத்துப் போனேன்.
நேற்று சித்தி சொன்னது வேறு தேவையில்லாமல் இந்நேரம் என் நினைவிற்கு வந்தது. சுடுகாட்டு பக்கம் யாரோ ஒரு பொம்பளைய காதறுத்து, கழுத்துல கெடக்குற சங்கிலிய அத்துக்கிட்டு போய்ட்டானாம். பஸ் இப்போது ஏறக்குறைய காலியாகிவிட்டது வேறு வயிற்றில் பீதியை உண்டு பண்ணிற்று. எங்களுடையது இப்போதுதான் வளர்ந்துவரும் ஒரு புறநகர்ப் பகுதி. இரவு எட்டு மணிக்கெல்லாம் ஆள்அரவமற்று போய்விடும். இப்போது அந்த பெண் என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்து நன்றாகச் சிரித்து 'செல்லையாநகராப்பா?' என்றாள். நான் என் டம்பப் பையை நன்றாக பிடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டேன்.
என் நிறுத்தம் வந்தது. இறங்கிக் கொண்டு வேகமாக நடந்தேன். நான் எதிர்பார்த்தது போல் அவளும் என்னை பின்தொடர்ந்து வந்தாள். ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன வேகமாக நடக்கிறாள். பயத்தில் என்னால் ஒரு நடை கூட இயல்பாக நடக்க முடியவில்லை.
என் பின்னேயே வந்து என் தெருவில் திரும்பியதும் சர்வ நிச்சயமாகிவிட்டது. அம்மா என கத்தாத குறையாக என் வீட்டு வாசலை அடைந்து கிரில் கேட்டைத் திறக்கவும் அவள் வெளியே நின்று 'வசந்திக்கா , வசந்திக்கா' என குரல் கொடுத்தாள். என் அம்மா வெளியே வந்து 'என்ன பஞ்சு, இந்நேரம்' என்றாள். 'ஒன்னுமில்லக்கா, பில்லக்கி மேலுக்கு முடியலன்னு டவுனு ஆஸ்பத்ரிக்கி கூட்டிட்டு போயிடு இப்பதான் வரேன், நம்ம பாப்பா இப்பதான் ஆபீசு முடிஞ்சு வந்துகிருந்துச்சு போல, அதுக்கு என்ன அடையாளம் தெரியல, ரவைல எப்புடி தனியா வரும், அதேன் வீடு வரக்யும் வந்தேன்க்கா, வரட்டுமா பாப்பா' என சொல்லிவிட்டு செல்ல நான் திருதிருவென விழித்துக் கொண்டு நின்றேன்.

நான் உங்க தம்பி Friend. இந்த blog ல அழகா எழுதிருகிங்க ரொம்ப நல்ல இருக்கு
ReplyDeleteமிக மிக அருமையான கதை... அழகான எதார்த்தம் நிறைந்தது..
ReplyDelete