Friday, November 25, 2016

பிரசவத்திற்குப்பின்

குழந்தை பராமரிப்பு என்பது தாயின் நலத்தையும் உள்ளடக்கியது. குழந்தை வயிற்றில் இருக்கும்போது உடல்நலத்தை பேணும் தாய்மார்களில் பலர் மகப்பேற்றிற்குப் பிறகு தன்னை சரியாக கவனித்துக்கொள்வதில்லை. இது முற்றிலும் புதியவர்களுக்கான பதிவு. ஆகவே முடிந்தவரை சிறு தகவல்களையும் சேர்த்துள்ளேன்.

குழந்தை பிறந்த அன்று காலையில் தாய்க்கு 2 வெற்றிலையில் அரை சிட்டிகை கஸ்தூரியை வைத்து மைய அரைத்துக் குடுக்கவேண்டும்.  கஸ்தூரி என்பது ஆண் கஸ்தூரி மானின் preputial gland இருந்து கிடைக்குமொரு சுரப்பு. இப்போதெல்லாம் தரமான கஸ்தூரி எந்த கடையிலும் கிடைப்பதில்லை. எனக்கு மதுரையில் ஒரு பிரபலநகைக்கடை குடும்பத்தினர் கொடுத்தனர். சொல்லிவைத்து வாங்கிக்கொள்ளுங்கள். கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.
2ம் நாள் மஞ்சள், வேப்பிலை,கருப்பட்டியை அரைத்து 3 அரை நெல்லிக்காய் அளவு கொடுங்கள்
3ம் நாள் சதக்குப்பை கஷாயம்
4ம் நாள் வெற்றிலை, அரிசி திப்பிலி
5ம் நாள் தேவையில்லை
6ம் நாள் இஞ்சி கஷாயம்
7ம் நாள் சித்தரத்தை கஷாயம் கொடுக்கவேண்டும்.

இவையெல்லாம் புண்ணாக இருக்கும் வயிற்றிற்கு பலம் தந்து ஜன்னி ஏதும் வராமல் தடுக்கக்கூடியது. வேனில் காலத்தில் பிள்ளை பெற்ற சில பெண்கள் இதமாக இருக்குமென பச்சை தண்ணீரில் குளித்துவிடுவார்கள். இது முற்றிலும் தவறு. பிள்ளை பெற்ற உடம்பிற்கு கண்டிப்பாக சூடு தேவை. உடல்சூட்டிற்கு அதிகமாக நீர் குடிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் அலோபதி  மருத்துவத்தில் டாக்டர்கள் லேகியம், பிள்ளை மருந்து வேண்டாம் என சொல்கின்றனர். ஆனால் பாட்டி வைத்தியத்தை மீறிய மருந்தில்லை என்பது என் கண்கூடான அனுபவம். குழந்தைக்கு ஒரு மாதம்வரை உரைமருந்தோ அல்லது வேறு அலோபதி மருந்துகளோ குடுக்க முடியாது.ஆகவே இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தாய்ப்பால் ஜீரணத்தை அதிகரித்து அளவையும் கூட்டி வயிற்றில் உள்ள கசடுகளை நீக்கும்.

தாய்க்கான பிரசவ லேகிய செய்முறை கீழே.

விரலி மஞ்சள் 1
சுக்கு 50 கிராம்
சித்தரத்தை 100 கிராம்
கண்டதிப்பிலி 50 கிராம்
ஓமம் 100 கிராம்
வாயுவிளங்கம் 25 கிராம்
அதிமதுரம் 1
ஆனைகொம்பம் 1 கிராம்
அதிவிடயம் 1
சாதிக்காய் 2
மாசக்காய் 2
சாதிபத்திரி 5 ரூபாய்க்கு
அரிசித்திப்பிலி 50 கிராம்
காசாணியம் 25 கிராம்
சதகுப்பை 50 கிராம்
வால்மிளகு 50 கிராம்

மேற்கண்ட பொருட்களை நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்துக்கொண்டு  இதனுடன் நைசாக பொடித்த கருப்பட்டி, தேன், நல்லெண்ணெய், நெய் தலா 100 சேர்த்து அல்வா பதத்தில் உருட்டிக்கொள்ளலாம். ருசியாகவும் இருக்கும். இதை காலை மாலை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு உட்க்கொள்ளலாம். செய்ய முடியாதவர்கள் கடையில் கிடைப்பதையும் உபயோகிக்கலாம். மதுரையெனில் தேர்முட்டியில் இந்த பொருட்களெல்லாம் கிடைக்கும்.

சீரகம் மிளகு அதிகம் சேர்த்த சுண்டவற்றல் குழம்பு, வெந்தயக்குழம்பு, கடலைதுவையல், இட்லி நல்லெண்ணெய், கருப்பட்டி காபி,அசைவம் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். என் அனுபவத்தில் ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டால் பால் அதிகம் ஊறுகிறது. குழந்தைக்கு தலை நிற்பதற்காக தலைக்கறி சாப்பிடலாம். ஆட்டுத்தலை என்றில்லை மீன், கோழி எதன் தலையானாலும். கண்டிப்பாக நிறைய நீர் பருக வேண்டும். இது பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை 90% குறைக்கும். பால் குடுக்கும் தாய்மார்களுக்கென கிடைக்கும்  உள்ளாடை அணியலாம். இதன் மூலம் பால் ஊறுவதை உணரலாம் தவிர மார்பகங்கள் தொய்வடைவதிலிருந்து காக்கும். முதுகுவலி உடையவர்கள் சத்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

முதல் ஒரு மாதத்திற்கு குளிக்கும் போணியைக்கூட தூக்க கூடாதென வீட்டில் சொல்வார்கள். தாமரையின் வரிகளில் வருவதுபோல தன்னையே பிழிந்துதானே ஒரு உயிரை வெளியே எடுக்கிறீர்கள். உங்கள் உடலும் பிறந்த ஒரு சிசுவிற்கு ஒப்பானதுதான். ஆகவே உங்களையும் கவனித்துக் கொண்டு பிள்ளையையும் கவனிக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட குழந்தைக்கு பால் கொடுக்கும்போது உங்கள் அழுகை, கோபம் எல்லாவற்றையும் தள்ளிவையுங்கள். ஏனென்றால் உங்கள் சோகம் உங்கள் குழந்தையையும் பாதிக்கும். ஆகவே சந்தோஷமாக குழந்தையை கொஞ்சிக்கொண்டே பால் கொடுங்கள்.

குழந்தை பால் குடிக்கவில்லையென்றால், உரம் விழுந்தால் என்ன செய்வது, இரவில் அழுதுகொண்டே இருந்தால் என்ன செய்வது போன்ற சேய்நல விபரங்கள் அடுத்த பதிவில்..........