Saturday, November 20, 2010

சம்பள நாள்

உட்கார்ந்திருந்த பெண்மணி நிறுத்தத்தில் இறங்கி நான் அவள் இருக்கையில் உட்கார்ந்தபோது பேருந்தில் கூட்டம் இருந்தாலும் அவ்வளவு நெரிசல் இல்லை. அருகில் நின்ற பெண் பையை தரும்போது அவள் பார்த்த பார்வையில் ஒரு துவேஷம் இருந்தது. ஏனோ நிற்கின்றவர்களுக்கு உட்கார்ந்திருப்பவர்களுடனும், உட்கார்ந்திருப்பவர்களுக்கு ஜன்னல் இருக்கையில் இருப்பவர்களுடனும்
 ஒரே நொடியில் ஜென்மபகை முளைத்துவிடுகிறது. நொடியில் அந்த குற்ற உணர்ச்சி மறந்து நானும் வசதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்க துவங்கினேன். இன்றுதான் சம்பள நாள். பெரியாரில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அப்படியே பிரியாவுடன் போத்தீஸ் சென்று வந்ததில் இன்று கொஞ்சம் நேரமாகிவிட்டதுதான். ரகங்கள் அவ்வளவாக பிடிக்கவில்லையென்று நாளை ஏ.கே.அஹமத் செல்லலாம் என வந்துவிட்டோம், என்ன இருந்தாலும் நடுத்தர வர்க்க மதுரைவாசிகளுக்கு ஏ.கே.அஹமதுதான்.
பேருந்து வேறு மெதுவாக சென்று கொண்டிருந்தது. நிறுத்தங்கள் செல்ல செல்ல கூட்டம் குறைந்தபோது தீக்கதிர் நிறுத்தத்தில் அவள் ஏறினாள் கையில் குழந்தையுடன். வேண்டாமென நினைத்தபோதும் நான் எண்ணியவாரே அவள் ஒருகணம் தயங்கிவிட்டு என்னருகில்தான் அமர்ந்தாள். என்னதான் முற்போக்காக சிந்திப்பதாக நினைத்தாலும் சில அதிகார சுகங்களுக்கு பழகிப்போன மனம் அதிலிருந்து விடுபட மறுத்தது.  தயக்கம், அவள் அழுக்கு சேலையும் துர்வாடையுமே தவிர வறுமை இல்லை என முட்டு கொடுத்தது. ஆனால் அவளோ அந்த ஸ்மரணை ஏதுமின்றி என்னருகில் தள்ளி அமர்ந்தாள்.
அப்போது தான் அவளை நன்றாக பார்த்தேன். சருகாகிபோன ஒரு ரேஷன் புடவையும், ஒரு பிளாஸ்டிக் தோடும், எப்போதோ வாங்கி இப்போது கறுத்துப்போன ஒரு கவரிங் செயினும், அவளின் ஒட்டிய கழுத்தெலும்பும், வயதிற்கு மீறி அவள் மூக்கருகில் தெரிந்த சுருக்கங்களும் என்னையறியாமல் அல்லது அறிந்து தள்ளி உட்காரவைத்தது.
மேலும் அவள் என்னை பார்த்து சிரித்தபோது சுத்தமாக வெலவெலத்துப்  போனேன்.
நேற்று சித்தி சொன்னது வேறு தேவையில்லாமல் இந்நேரம் என் நினைவிற்கு வந்தது. சுடுகாட்டு பக்கம் யாரோ ஒரு பொம்பளைய காதறுத்து, கழுத்துல கெடக்குற சங்கிலிய அத்துக்கிட்டு போய்ட்டானாம். பஸ்  இப்போது ஏறக்குறைய காலியாகிவிட்டது வேறு வயிற்றில் பீதியை உண்டு பண்ணிற்று. எங்களுடையது இப்போதுதான் வளர்ந்துவரும் ஒரு புறநகர்ப் பகுதி. இரவு எட்டு மணிக்கெல்லாம் ஆள்அரவமற்று போய்விடும். இப்போது அந்த பெண் என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்து நன்றாகச்  சிரித்து 'செல்லையாநகராப்பா?' என்றாள். நான் என் டம்பப் பையை நன்றாக பிடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டேன்.
என் நிறுத்தம் வந்தது. இறங்கிக் கொண்டு வேகமாக நடந்தேன். நான் எதிர்பார்த்தது போல் அவளும் என்னை பின்தொடர்ந்து வந்தாள். ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன வேகமாக நடக்கிறாள். பயத்தில் என்னால் ஒரு நடை கூட இயல்பாக நடக்க முடியவில்லை.
என் பின்னேயே வந்து என் தெருவில் திரும்பியதும் சர்வ நிச்சயமாகிவிட்டது. அம்மா என கத்தாத குறையாக என் வீட்டு வாசலை அடைந்து கிரில் கேட்டைத் திறக்கவும் அவள் வெளியே நின்று 'வசந்திக்கா , வசந்திக்கா' என குரல் கொடுத்தாள். என் அம்மா வெளியே வந்து 'என்ன பஞ்சு, இந்நேரம்' என்றாள். 'ஒன்னுமில்லக்கா, பில்லக்கி மேலுக்கு முடியலன்னு டவுனு ஆஸ்பத்ரிக்கி கூட்டிட்டு போயிடு இப்பதான் வரேன், நம்ம பாப்பா இப்பதான் ஆபீசு முடிஞ்சு வந்துகிருந்துச்சு போல, அதுக்கு என்ன அடையாளம் தெரியல, ரவைல எப்புடி தனியா வரும், அதேன் வீடு வரக்யும் வந்தேன்க்கா, வரட்டுமா பாப்பா' என சொல்லிவிட்டு செல்ல நான் திருதிருவென விழித்துக் கொண்டு நின்றேன்.

Sunday, November 14, 2010

நீ, எனக்கு....

பாட்டி தந்த பருப்பு சாதத்தின்
கடைசி உருண்டை நீ எனக்கு,
மிட்டாய்களை அள்ள
இரு கைகளும் பற்றாமல் கண்களையும் விரிக்கும்
சிறுகுழந்தையை  போல்
உன்னுடன் பேசும் நிமிடங்கள் மட்டும்
நீண்டு கொண்டே
செல்ல வேண்டுமெனக்கு
என் கன்னங்களோடு உன் கன்னங்களை இழைப்பதோ 
எதிர்பாராமல் வந்து
பாதங்களை முட்டும் முயல் குட்டியோ 
தூக்கத்தில் தெரியாமல் விழும்
குழந்தையின் கையோ
ஏதாவதொன்று
எப்போதும் வேண்டுமெனக்கு

Saturday, November 13, 2010

நெறிமாறிகள்

வெறுமையின் அழுத்தத்தில் திமிறி கொண்டிருந்த, என்ன நிறமென்று யூகித்தறிய இயலா சிறிதே வேதனைகளால்  கருமை படர்ந்த,  தனிமையின் அடர்த்தியில் பிசுபிசுத்து போன அறையில் காலண்டரின் பக்கங்கள்  தேடுதல்களின் உச்சத்தில் படபடத்து கொண்டிருந்தது.
காதல் என்பது  ஒரு தேடல் மட்டுமே என்பதை உணராமல் அதை புனிதம் தெய்வீகம் என்பவர்களை நினைத்தால் இப்போதேல்லாம்  சிரிப்பு மட்டுமே எஞ்சுகிறது. அடுத்தது என்ன என்பது மட்டும்தான் காதலோ, ஏற்று கொண்டாலே கிட்டும் வீடுபேற்றில் ஜனிக்கும் காதல் முத்தத்தில் ஆரம்பித்து உச்சத்தின் வீழ்ச்சியில் செத்துவிடுகிறது. பெர்னார்ட் ஷா சொன்னது போல் சொல்லி விட்டாலே காதல் செத்துவிடுகிறதோ?!.  உண்மையை சொன்னால் ஏற்று கொள்ளாத மனம், நீர்க்குமிழியின் நிறபூச்சில் ஏமார்ந்து அதில் முகம் பார்த்து உவகை கொள்கிறது.  வாழ்க்கை அதன் ஷட்ஜமம், மத்திமம், காந்தாரதிலிருந்து நிலை பிரளும்போது கசந்தது.
அந்த ஒரு நொடிதான் வலித்தது.  

Friday, November 12, 2010

ஷங்கருக்கு போட்டியா நானும் கேப்டனும்....

ஹலோ ஏழை, பாழைகளே, எழுத உக்காந்தாச்சு, சீரியசா ஏதாவது எழுதலாம்னு பாத்தா பக்கத்துலையே ஒரு நாதேரி உக்காந்து மொக்க போடுது. சரி ஒரு கவித எழுதலாம்னு பாத்தா, சனியன் அந்த கருமாந்தரம் நமக்கு வருதுஇல்ல. சர்தாண்டான்னு, ஷங்கரோட ரோபோக்கு போட்டியா கேப்டன வச்சு, நம்ம பாய் பிரெண்ட் (இது டீகட பாய்ங்க) தயாரிப்ப்புல ஒரு படமெடுத்துபுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். படம் பேரு விண்ணரசு( பேரரசு, வல்லரசு போக மிச்சமிருக்கிறது ). நவ் லெட் அஸ் வாட்ச் தா ப்ளே, ஓபனிங்ல, நம்ம ஹீரோ பேரு முருகன், எஸ், எஸ், மெக்கானிக் ஷாப்லதான் வேல பாக்குறாரு. அவரு டைட் டீஷர்ட் ல மயங்கி இஷா கோபிகர் கேப்டன வெறித்தனமா காதலிக்கிறாங்க. இஷாவோட அப்பா யாருன்னா நம்ம பாகிஸ்தான் தீவிரவாதிகளோட கையாள். நடு நடுல இஷாவோட காதல் ஆராரோ காதல் ஆராரோனு டூயட் பாடுறாரு (அதுல அந்த ரொமான்ஸ் சீக்வென்ஸ்ல இஷாவோட பேர்பாமன்ஸ்க்கு ஆஸ்காரே குடுக்கலாம்). க்ளைமேக்ஸ்ல பாகிஸ்தான் தீவிரவாதிங்க ப்ளைட்ட ஹய்ஜாக் பண்ணி fault ஆக்கி உட்டுட்டு பாரசூட்ல கீழ குதிசிராங்க்ய. அப்ப நம்ம கேப்டன் மக்கள காப்பாத்துறதுக்காக ப்ளைட்டுக்கு அடில படுத்துகிட்டு பட்டி, டிங்கரிங் வேலையெல்லாம் பாக்குறாரு. இதுக்கு நடுல பாரசூட்ல குதிச்ச நம்ம தீவிரவாதிங்ககூட பேலன்ஸ் பண்ணி தலைகீழா சண்ட போட்டு ஜெயிகிறாரு. ஜெயிச்சு ப்ளைட்ட ஒரு பொட்ட காட்ல லான்ட் பண்றாரு, அந்த எடம் எப்புடி நம்ம இந்திய அரசாங்கத்துக்கு முன்னாடியே  தெரியுமோ, கரெக்டா ஆல் போலிஸ், ஐ ஜி, இஷா, அவுங்க அப்பா, ஆல் பொது மக்கள் அந்த பொட்ட காட்ல கூடிருவாங்க்ய (டேய், இவ்வளவு நேரம் எங்கடா இருந்தீங்க?).  அப்புறம் கேப்டனுக்கு  மெடல், சிபிஐல வேல. சரி சரி இன்னக்கி மொக்க போதும், நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் குடல் கொழம்பு வச்சு சாப்புடுங்க.

Wednesday, November 10, 2010

மழையில் நனைந்த கனவுகளுக்கு காய்ச்சல் வருவதில்லை
வெயிலில் காய்ந்த கனவுகளுக்கு வியர்ப்பதில்லை
பதவி உயர்வு கனவுகள் பர்ஸை நிறைப்பதில்லை
ஆனால் நீ வரும் கனவுகள் மட்டும் ஏன் அன்பே
என் நிஜங்களையும் பாதிக்கிறது.